(முற்றிலும் புனையப்பட்ட கதை)
உறையூர் இராச்சியத்தை வரகுண வர்மன் எனும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அவனது நல்லாட்சியில் இராச்சியம் வளம் பெற்று, மக்கள் நலமுற்று செல்வ செழிப்புடன் வாழ்ந்தனர், உணவு, உடை, பொன், பொருள், வைரம், வைடூரியம் என அனைத்து செல்வங்களும் அனைவருக்கும் கொட்டிக்கொடுத்தான் வரகுண வர்மன், மக்களும் மன்னன் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள்.
மன்னனுக்கு ஒரு மக்கள் இருந்தால் பெயர் மங்கையற்கரசி, பேரழகி, இளவரசிகளுக்கு உரிய அத்தனை அழகும் திறமையும் ஒருங்கே பெற்றவள், மன்னன் எட்டடி என்றால் இளவரசி பதினாறடி மக்களுக்கு வாரி கொடுப்பதில் வள்ளல், அவளது இந்த குணமும் அழகும் அவளை மக்களது செல்லப் பிள்ளையாக ஆக்கியது. இளவரசிக்கு ஓவியம் தீட்டுவதில் பேரார்வம் பறந்து விரிந்திருந்த அரண்மனையில் அவளது ஓவியங்கள் நிறைந்திருக்கும்.
தந்தையின் வெற்றிக்கு கதைகள், ராச்சியத்தில் நடக்கும் பெருவிழாக்கள், விதை விதைப்பு, அறுவடை, கோவில் திருவிழாக்கள், என அத்தனை நிகழ்வுகளையும் ஓவியமாக தீட்டுவாள், அவளது மொழி ஓவியம்தான் வாய் பேச இயலாவிட்டாலும் தன தேவையை ஓவியத்தினூடாக உணர்த்திடும் திறமை கொண்டவள். அவளது பணியாளர்கள் ஓவியத்திற்கு வேண்டிய வர்ணங்களை வனத்தில் உள்ள மலர்கள், இலைகள், கிளைகள், வேர்கள், களிமண் என பல்வேறு மூலங்களில் இருந்து தயாரித்து கொடுப்பார்கள்.
வர்ணங்களை தயாரிக்கவும், அதற்கான சரியான மூலங்களை கண்டு பிடிக்கவும்; அதற்காக பிரத்தியேகமாக அவர்களே உருவாக்கிய இயந்திரம், நீண்ட கால பாவனைக்கு ஏற்ப பதப்படுத்தி வைக்க பயன்படும் பதனிடல் பதார்த்தங்கள், மற்றும் இவற்றையெல்லாம் மேலாண்மை செய்து வர்ணங்களை உருவாக்கும் வர்ணக் கலைஞர்கள் உட்பட்ட குழு ஒன்று அரண்மனையில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மண்டபத்தில் எப்போதும் இருப்பார்கள்.
மன்னன் மகளுக்காக மட்டுமன்றி தன் மக்களுக்காகவும் இந்த வர்ணம் மற்றும் ஓவியக் கலையை பயிற்றுவிக்கும் ஆசிரியர் குழாம் ஒன்றையும் உருவாக்கியிருந்தான், அந்த ஆசிரியர்களில் இளவரசியும் ஒருவராவாள். சமயம், அறிவியல், சமூகம், சார்ந்த கல்வியோடு இந்த கலை சார்ந்த கல்வியும் மக்களுக்கு வழங்கங்கப்பட்டது. மக்களும் இவற்றையெல்லாம் கற்றுக் கொள்வது மிக அவசியம் என்று கருதினர், இவ்வாறு கல்வியிலும் கலையிலும் சிறந்து விளங்கும் வர்ணமயமான இராச்சியமாக உறையூர் இருந்தது.
ஒரு கோடை காலத்தில்; மன்னன் இராச்சியத்தின் அறுவடை களமொன்றில் வேலைகள் நடப்பதை அவதானித்தவாறு உலாவிக் கொண்டிருந்தான். அப்போது அவனது எண்ணத்தில் இளவரசி பற்றிய யோசனை தோன்றியது ஊமையாக இருந்தாலும் என்னோடு என் மகள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள்....... அவளுக்கு இங்கு எந்த குறையும் இல்லை மக்களின் செல்லப் பிள்ளை அவள் இதுவே அவள் ஒரு இளவரசனை மணந்து கொண்டால் என்னவாகும்....?
அந்த நாட்டில் என் மகளின் தேவையை குறிப்பால் உணரும் மக்கள் இருக்க மாட்டார்களே...! திருமணமான பெண்ணுக்கு கலை எதற்கு என்று புகுந்த வீட்டில் அவளது மொழிக்கே தடை விதித்து விட்டால் என்ன செய்வாள்...? அந்த நாட்டு மக்கள் வாய் பேச இயலாமையை பெரிய குறையாக கருதினால்.....? என்ன செய்வேன் என் மகளது எதிர்காலத்துக்கு நான் என்ன செய்யப் போகிறேன்....???? என்று பலவாறு சிந்தித்து வேதனையடைந்தான்.
இதற்கு ஒரு நல்ல தீர்வு காண விரும்பினான் தன் மகளுடைய வாழ்க்கை இப்போது போல எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்யலாம் என பல நாட்கள் யோசித்தான் இறுதியில் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. தனது இராச்சியத்தில் உள்ள ஒரு சாதாரண இளைஞனுக்கு இளவரசியை மணமுடித்தால் அவன் இந்த நாட்டின் இளவரசானாவான் தனது மகளும் எப்போதும் போல தன்னுடன் இருப்பாள் என்று எண்ணினான். ஆனால் மாப்பிள்ளையை எவ்வாறு தெரிவு செய்வது......?
தனது மந்திரிகளை அழைத்தான்! இளவரசிக்கு மணமுடிக்கும் வயது வந்துவிட்டது. இளவரசர்கள் எவரும் எனக்கு மாப்பிள்ளையாக வர வேண்டாம் நாட்டிலுள்ள சாதாரண குடிமகன் ஒருவனை தெரிவு செய்ய வேண்டும். பொருத்தமான இளைஞனை எவ்வாறு தெரிவு செய்வது ஆலோசனை கூறுங்கள் என்று கேட்டான். பற்பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன, இறுதியாக மன்னன் தேர்வு செய்த ஆலோசனை ஒரு வீரமிக்க இளைஞனை தெரிவு செய்ய கூடிய வகையில் இருந்தது.
இராச்சியத்திலிருந்த விஷப்பாம்புகள் நிறைந்த குளத்தை இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்தி சென்று அங்கிருக்கும் வனத்தில் கரடிகள் வாழும் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வைடூரியக் கல்லை எடுத்து வரும் இளைஞனுக்கு இளவரசியை மணப்பதென்று தீர்மானம் எடுக்கக்கப்பட்டது. ஆனால் ஒருமுறை குளத்தில் குதித்து விட்டால் அக்கரைக்கு தான் செல்ல வேண்டும் இடையில் திரும்பினால் அவரிடம் இருக்கும் செல்வமெல்லாம் மன்னருக்கு சொந்தம் என்ற நிபந்தனையும் வைக்கப்பட்டது.
போட்டி பற்றி மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. போட்டி நாள் வந்தது மக்கள் கூடினர், மன்னனும் இளவரசியும், பிற மந்திரிகள் என அனைவரும் கூடினர், வெகு நேரம் ஆகியும் எவருமே குளத்தில் குதிக்கவில்லை. மன்னன் எழுந்து போட்டியில் வெற்றி பெறும் இளைஞனுக்கு இளவரசியை மணமுடிப்பதோடு 1000 வராகன் பொன், மற்றும் 10 கிராமங்களை இன்றே பரிசளிப்பேன், எனது ஆட்சிக்காலம் முடிந்ததும் என் மகளின் கணவர் மன்னனாக முடி சூட்டி கொள்வார் என்று அறிவித்தார், அப்போதும் உயிர் பிழைக்கும் சாத்தியம் மிக்க குறைவு என்பதால் எவருமே குதிக்கவில்லை.
நேரம் கடந்தது, மக்களும் களைந்து செல்ல தொடங்கினர். திடீரென ஒரு இளைஞன் குளத்தில் குதித்தான் கொஞ்சமும் தாமதிக்காமல் வேகமாக நீந்திச் சென்றான், மக்கள் மீண்டும் திரண்டனர் இளைஞனின் துணிகரச் செயலை கண்டு வியந்து புகழ்ந்தனர். அப்போது மன்னர் காதுக்கு அவன் யார் என்ற தகவல் கிட்டியது. சாதாரண வணிகர் ஒருவரின் ஒரே மகன் மணிகண்டன் அவன். மணிகண்டனின் தாய் மகனே உனக்கெதற்கு இந்த தேவையில்லாத வேலை திரும்பி வந்து விடு என்று கதறினாள், மேலும் சில உறவினர்களும் மணிகண்டா வேண்டாம் வந்து விடு என கத்தி கூச்சல் போட்டனர்.
இதற்கிடையில் மணிகண்டன் வழியில் வந்த விஷப்பாம்புகளை ஆத்திரத்தோடு தூக்கி எறிந்து ஆபத்தின்றி அக்கரையை அடைந்தான். ஆஹா என்ன வீரம்...! என் மாப்பிள்ளை இவன்தான் என்று மகிழ்ச்சி பெருமிதத்தோடு மன்னன் கூறினான் , விசைப்பண்புகளையே கடந்து விட்டான் என் மாப்பிள்ளைக்கு வைடூரியத்தை எடுப்பதொன்றும் பெரிய காரியமால்ல என்று எண்ணிக் கொண்டார். மன்னர் கூறியது போல் மணிகண்டன் வைடூரியத்தோடு மீண்டும் குளத்தை கடந்து இக்கரைக்கு வந்தான்.
மன்னர் ஓடி வந்து மணிகண்டனைத் தழுவி அடுத்த முகூர்த்தத்திலே திருமணம் இப்போது உனக்கு தருவதாக சொன்ன 1000 வராகன் பொன், மற்றும் 10 கிராமங்களை தருவேன், வேறு என்ன கேட்டாலும் தருவேன் கேள் மணிகண்டா உனக்கு என்ன வேண்டும்....? என்றார் மன்னர். மணிகண்டன் மன்னிக்க வேண்டும் மன்னா எனக்கு ஒன்றுமே வேண்டாம் இதோ உங்கள் வைடூரியம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு சுருக்கு பையை மன்னரிடம் நீட்டினான்... ஆச்சரியப்பட்ட மன்னன்.
இவற்றை தானே நான் பரிசாக அறிவித்தேன் இவை ஒன்றும் வேண்டாம் என்றால் வேறு என்ன வேண்டும் கேள் தருகிறேன் இது நான் உனக்களிக்கும் வாக்கு என்றார் மன்னர். மன்னா..! நான் மனைவி குழந்தைகளோடு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறேன், பொன் பொருள் எதுவும் எனக்கு வேண்டாம், இளவரசியின் தகுதிக்கேற்ற மணவாளனை அவர்கள் நிச்சயம் அடைவார்கள். ஆனால் என்னை குளத்தில் தள்ளி விட்டவன் யார் என்பதை நீங்கள் கண்டு பிடிக்க வேண்டும் அதற்காகத்தான் நான் அக்கரைக்கு சென்று வைடூரியத்தை கண்டு வந்தேன் என்றான்.
மன்னர் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சி, மன்னர் வாக்களித்தபடி அன்றிலிருந்து மணிகண்டனை குளத்தில் தள்ளிவிட்டவனை தேடும் பணி ஆரம்பமானது.
முற்றும்
Comments
Post a Comment