அது ஒரு கோடை காலம் அமெரிக்காவின் இந்தியனாவில் மாலைச் சூரியன் மெல்ல மங்கிய ஒளியில் மறைந்து கொண்டிருந்தான். ஒரு சிறிய கிராமத்து பாதையில், பழைய சைக்கிளின் மணி அவ்வப்போது ஆங்காங்கே ஒலித்தது. வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்வது தான் அந்த சிறுவனின் வேலை.
சார்லஸ், வயது பன்னிரண்டு-பதின்மூன்று இருக்கும். நல்ல புத்திசாலி சிறுவன், இயல்பாகவே அறிவியலில் அதீத ஆர்வம் கொண்டவன், வேலை செய்யும் நேரம் தவிர்ந்த மற்ற ஒய்வு நேரங்களில் வீட்டை சுற்றியுள்ள சூழலை ஆராய்வது, பொது நூலகத்தில் புத்தகங்களை இரவல் பெற்று வாசிப்பது என அவனது ஆர்வம் ஒரு கல்வி சமூகத்தை நோக்கி இருந்தது.
அது இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய காலம் போர் பற்றிய சலசலப்புகள் பரவலாக ஆங்காங்கே பேசப்பட்டுக் கொண்டிருந்த காலம், நாட்டிலுள்ள மக்களில் சிலர் நாட்டிற்காக தேசப்பற்றோடு இராணுவத்தில் சேர்வார்கள். ஆனால் பலர் அரச சட்டங்களுக்கு கட்டுப்பட்டு கட்டாயத்தின் பெயரில் சேர்க்கப்படுவார்கள்.
அப்படித்தான் சார்லஸின் தந்தையும் அவனது மூன்று மூத்த சகோதரர்களும் போர் வீரர்களானார்கள். ஆக இப்போதைக்கு சார்லஸ் தான் வீட்டுக்கு மூத்தவன் என்றாகி விட்டது. தாய், தனது இரண்டு இளைய சகோதரிகள், மற்றும் அவனது இளைய சகோதரன் ஒருவன் என அவனையும் சேர்த்து மொத்தமாக ஐந்து பேருக்கு உணவளிக்கும் பொறுப்பு அவனுடையதானது.
பாடசாலையை கைவிடவில்லை, ஆனால் முழுமையாக பாடசாலைக்கு செல்லவும் முடியவில்லை இப்படியே ஒரு நாள் படிப்பு மூன்று நாள் வேலை என அவனது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் இது ஒன்றும் அவனுக்கு கடினமாகத் தோன்றவில்லை.... காரணம் அங்கு அநேகமான வீடுகளில் இதுதான் நிலைமை. ஒரு சில செல்வந்தர்கள் சக மக்களுக்கும் உதவினார், ஒரு சிலர் எனக்கென்ன போச்சு...? என்று தங்கள் குடும்பங்களில் கவனம் செலுத்தினர்.
சைக்கிளில் இருந்த கூடை விற்க வேண்டிய பொருட்களால் நிறைந்திருந்தாலும், அவனது வயிறு காலியாக இருந்தது. அன்று நாள் முழுவது அவன் எதையும் சாப்பிடவில்லை, வீட்டிலிருந்து உணவு எதையும் எடுத்து வரவில்லை, வியாபாரத்தில் கிடைக்கும் ஒரு சென்டை(Cents) கூட அவன் தனக்காக செலவழிக்கவும் விரும்பவில்லை, அருகில் இருக்கும் செவந்தர்களின் வீடுகள் எதிலாவது உணவு கிடைக்கும் என்று மெதுவாக சைக்கிளை மித்திக்கத் தொடங்கினான்.
நினைத்ததோடு சரி, இரண்டு மூன்று வீடுகள் கடந்தாகி விட்டது. உணவை யாசிக்க மனம் வரவில்லை மனப் போராட்டம் தொடங்கியது, யாரிடமும் யாசிக்க வேண்டாம்... பொறுத்து கொண்டு வீட்டுக்கு போய் பார்த்துக்கொள்ளலாம், இல்லை இல்லை உடல் இயங்க மறுக்கிறது உதவி கேட்டால் தவறில்லை....... இந்த எண்ணப் போராட்டங்களுக்கு நடுவே மீண்டும் ஒரு வீட்டை வந்தடைந்தான்.
ஆழ்ந்து மூச்சு விட்டான், வீட்டின் கதவருகே சென்றான், மனதை திடப்படுத்தியவனாய் கதவை தட்ட முற்பட்டான், திரும்பினான்.... யோசித்தான்.... மீண்டும் சென்றான் தட்டாமலேயே கதவு திறந்தது, ஒரு இளம்பெண் நின்றிருந்தாள், யாசிக்க வார்த்தை வரவில்லை...... தடுமாறினான் ..... கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா?
நிச்சயமாக, உள்ளே சென்ற பெண் சார்லஸின் கண்களில் பசியை உணர்ந்தவளாய் ஒரு டம்ளர் நிறைய பாலோடு வந்தாள். அந்த கண்ணாடி டம்ளரில் பாலைக் கண்டவுடன் அவன் கண்கள் குளமாகின, உனது தன்னலமற்ற கடின உழைப்புக்கு முன்னாள் இது ஒன்றுமே இல்லை என்று கூறி அந்த பெண் நோவா பாலை அவனிடம் நீட்டினாள். பசியாறியவன் "நான்… எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?” என்று கேட்டான்.
மெதுவாக புன்னகைத்த நோவா
“கடனா? அப்படி ஒன்றும் இல்லையே!
என் தாயார் அடிக்கடி சொல்லுவார்…
அன்பான செயலுக்கு விலை எதுவும் கிடையாது!” என்றாள் அவள்.
நன்றி தெரிவித்து, அவ்விடத்தை விட்டு சென்றான். அந்த நாள், அந்த பெண், அவளது அன்புள்ளம் அவனது நெஞ்சில் நீங்க இடம் பிடித்தது. நாட்கள்......, மாதங்கள்....., ஆண்டுகள் கடந்தன. போர் ஓய்ந்தது, சார்லஸின் மூத்த சகோதரன் நாட்டுக்காக சேவை செய்ய இராணுவ பணியைத் தொடர்ந்தார். தந்தை மற்றும் மற்ற இரண்டு சகோதரர்களும் நாட்டுக்காக தம் உயிரை அர்பணித்தனர்.
உயர் பள்ளியின் இறுதியாண்டு, தான் விரும்பிய பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறத் தேவையான அத்தனை உயர்கல்வி திறமைகளையும் சிறப்பாக பூர்த்தி செய்திருந்தான் சார்லஸ். கோடை காலங்களிலும், பள்ளி நேரம் தவிர ஒய்வு நேரங்களிலும் பகுதி நேர வேலை செய்து தனது செலவுகளை தானே பார்த்துக் கொண்டான்.... இவ்வாறே நாட்கள் கடந்தன.
பள்ளி இறுதிநாள் நெருங்கியது, ஒரு நாள் பாடசாலையில் மாணவர் லொக்கரில் வைக்கப்பட்டிருந்த தனது பொருட்களை எல்லாம் சரி பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தான், பழைய ஞாபகங்களையும் மீட்டுக் கொண்டிருந்தான், ஒரு பழைய புத்தகம் அதை ஒவ்வொரு பக்கமாக புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான், கடந்து சென்ற ஒரு பக்கத்தில் நோவா என்ற பெயர் தெரிந்தது..... அவன் முகம் மலர்ந்தது.
அவன் விரும்பிய பல்கலைக் கழகத்திற்கு தெரிவானான். அங்கும் நூல்கள் தான் அவனுக்கு தோழர்கள், அதே நடைமுறை - வேலை, படிப்பு, சில நேரங்களில் இரண்டையும் சமாளிக்க முடியாமல் வறுமையில் மூழ்கி பசி தாங்கி பின் மீண்டும் எழுந்து...... இப்படி இடை விடாத முயற்சி அவனை வைத்தியராக்கியது.
அவனது கனவு நனவாகியது, அவன் படித்த நகரிலேயே மிக பிரபலமான வைத்தியசாலையில் பணியாற்றத் தொடங்கினான். நோயாளிகளை அன்போடும் பரிவோடும் நடத்தும் அவனது இயல்பு வெகு விரைவிலேயே அவனையும் பிரபலமாக்கியது.
அவசர சிகிச்சை பிரிவில் ஒரு நோயாளியை கவனிக்குமாறு சார்லஸுக்கு அறிவுறுத்தப்பட்டது. நோயாளி பற்றிய விபரங்கள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் என்பவற்றை ஆராய்ந்து கொண்டே ஓட்டமும் நடையுமாக அவசர சிகிச்சை பிரிவை நோக்கி சென்றான்.... ஒரு நிமிடம் கால்கள் அசைய மறுத்தது... அப்படியே நின்றான்.
விபரக் கோவையில் இருந்த அந்த நோவா என்ற பெயர் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இல்லை இல்லை இது அவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்று தன்னை தானே தேற்றி கொண்டு ஊர் பெயர் மற்றும் பிற விபரங்களை பார்த்தான்.... நெஞ்சு வெடித்துவிடும் போல் கண்கள் கண்ணீரால் நிறைந்தது.
ஓடோடி வந்தான் செல்வங்களையெல்லாம் இழந்து, ஆதரவு காட்ட எவரும் இன்றி துன்பத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் அந்த தாயுள்ளம் கொண்ட தேவதையை கண்ட போது மனமுடைந்து போனான். மயக்க நிலையில் இருந்த நோவா தான் இப்போது ஒரு பாதுகாப்பான கரங்களில் இருப்பதை உணரவில்லை.
கொடிய புற்று நோயை பல மாதங்கள் சத்திர சிகிச்சை, ரேடியேஷன் தெரப்பி போன்ற தேவையான அத்தனை சிகிச்சைகளையும் வழங்கி குணமாக்கினான். சிகிச்சைக்கான அதீத செலவுகளை சமாளிக்க அதிக நேரம் வெவ்வேறு வைத்தியசாலைகளிலும் மேலதிகமாக பணியாற்றினான், வேலைப்பழு நிறைந்த நாளாக இருந்தாலும் தினமும் ஒருமுறையாவது நோவாவை கண்டு அவளுக்கு வேண்டிய பணிகளை செய்தான். ஆனால் ஒரு முறை கூட தான் யார் என்பதை வெளிப்படுத்தவில்லை.
நோவா முற்றுலும் குணமடைந்தாள், வைத்தியர்கள் அவளை வீட்டுக்கு செல்ல அனுமதித்தனர், அவளுடைய பரிசோதனை விபரங்கள் மருந்து குறிப்புகள் போன்ற ஆவணங்களுடன் சிகிச்சைக்கான பில்லும்(Bill) உம் வந்து சேர்ந்தது. அதை பார்த்தவுடன் மீண்டும் நோயுற்றதை போல் உணர்ந்தாள், இவ்வளவு செலவா இந்த பணத்தை எப்படி செலுத்துவேன் என்று தலையில் கையை வைத்தாள்......
பெருமூச்சு விட்டபடி எல்லா ஆவணங்களையும் அடுக்கி பைக்குள் வைக்க முற்பட்டாள் ஆவணங்கள் நடுவே ஒரு கையால் எழுதப்பட்ட குறிப்பு துண்டு ஒன்றை கண்டாள் "ஒரு டம்ளர் பாலில் உங்கள் கடன் முழுவதும் தீர்க்கப்பட்டுவிட்டது" பில்லை(Bill) பற்றி கவலை வேண்டாம் நான் செலுத்திவிட்டேன். நன்றியுடன் சார்லஸ்... என்று எழுதியிருந்தது. புன்முறுவலோடு வீட்டை நோக்கி புறப்பட்டாள் நோவா.......
-முற்றிலும் புனையப்பட்ட கதை-
Comments
Post a Comment